சீனா அரசின் அதிகாரிகளை சந்தித்ததாக அமெரிக்காவில் இந்திய நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் ஆஷ்லே டெல்லிஸ். இவர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்தவர்; அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பின்னர் அரசியல் அறிவியல் படிப்பிலும் முதுகலை பட்டம் பெற்றார்.
தெற்காசிய அரசியல் தொடர்பான கொள்கை வகுப்பாளராக, ஆய்வாளராக செயல்பட்டு வந்த ஆஸ்லே டெல்லிஸ், 2001-ல் அமெரிக்கா அரசின் ஆலோசகராகவும் செயல்பட்டார். மேலும் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் மூத்த உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார், வாஷிங்டனுக்கும், புது டெல்லிக்கும் இடையிலான தொடர்புக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். இந்த நிலையில், சீனாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததாக ஆஸ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனா அரசின் அதிகாரிகளை 2022-ம் ஆண்டு முதல் டெல்லிஸ் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அவரது வர்ஜீனியா வீட்டில் 1,000 பக்கங்களுக்கு மேல் ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லிஸிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


