கடந்த 17 நாட்களாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.
கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெகவினர் 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர்.
இவர்களை கைது செய்வதற்கு 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இதனால், அச்சமடைந்த புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர். மேலும், தங்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்புக்கொண்டு தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கிடையே, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பிறகு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 17 நாட்களாக தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜயின் இல்லத்தில், அவரை நேரில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயுடன் என். ஆனந்த் சுமார் 20 நிமிடம் பேசியுள்ளார். இந்த சந்திப்பை முடித்து கொண்டு புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.


