நேபாளத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவின. இதனால் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ‘ஜென் இசட்’ எனும் இளம் தலைமுறையினர் கடந்த மாதம் அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, 76 பேர் கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இதனால் அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், அரசையும் கலைத்தார். அந்நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுசீலா இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், நேபாளத்தில் இளைஞர்கள் நடத்தி போராட்டத்திற்குப் பிறகு, சிறைகளில் இருந்து 540 இந்திய கைதிகள் தப்பியோடி விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தின் போது நேபாளத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து சுமார் 13,000 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
அதில், நேபாளத்தைச் சேர்ந்த 5,000 தண்டனை கைதிகளும், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த 108 கைதிகளும் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறையில் இருந்து கைதிகள் தப்பியது தொடர்பாக நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தப்பியோடிய கைதிகள் அந்தந்த சிறைகளுக்கு திரும்புமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள சிறைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அந்நாட்டு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


