நடிப்பை தொடர விரும்புவதால் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று அமைச்சர் சுரேஷ் கோபி பேசியதால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.
கேரளா மாநிலம், திரிச்சூர் தொகுதி எம்.பியாக இருப்பவர் சுரேஷ் கோபி. மலையாள திரையுலகின் பிரபல நடிகரான இவர், தமிழில் சரத்குமார், அஜித் உள்பட பலருடன் இணைந்து நடித்துள்ளார். பாஜகவை சேர்ந்த இவருக்கு கேரளாவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. திரிச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து மத்திய அமைச்சரவையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான இணை அமைச்சராக சுரேஷ் கோபி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற பாஜக விழாவில் சதானந்தன் மாஸ்டர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு பேசுகையில், ” நான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்பட்டதில்லை. அமைச்சரான பிறகு எனது சினிமா வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளேன். உண்மையில் நான் நடிப்பை தொடரவே விரும்புகிறேன்.
அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்க வேண்டும் என்று நான் இங்கே மனதாரக் கூறுகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நம்புகிறேன்” என்றார். பொது வெளியில் அமைச்சர் பதவியை விட்டு விட்டு நடிக்கப் போகிறேன் என்று சுரேஷ் கோபி கூறியதால், பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.


