கோவையில் 5 நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தமிழகத்தின் முதலாவது மிக நீண்ட இப்பாலத்தில் நேற்று நள்ளிரவு மோசமான விபத்து நடந்துள்ளது. உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார், இப்பாலத்தின் இறக்கத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லாரிக்கு அடியில் சிக்கிய காரில் இருந்து மூன்று பேரில் உடல்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் போலீஸாரால் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. லாரிக்கு அடியில் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


