ஆர்எஸ்எஸ் முகாமில் ஓரினச்சேர்க்கை… இளைஞர் தற்கொலை குறித்து விசாரிக்க பிரியங்கா கோரிக்கை

ஆர்எஸ்எஸ் முகாமில் கூட்டு ஓரினச்சேர்க்கையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.டி ஊழியர் தற்கொலை

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வஞ்சிமலையை அடுத்த சாமக்காலாவைச் சேர்ந்தவர் ஆனந்து அஜி(24). ஐ.டி ஊழியரான இவர் இரண்டு நாட்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் முகாமில் கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் தொல்லை

தற்கொலை செய்வதற்கு முன் இன்ஸ்டா கிராமில் ஆனந்து அஜி வெளியிட்ட மரணக் குறிப்பில்,”நான் தற்கொலை செய்து கொள்வது பெண்ணாலோ, காதல் விவகாரத்தாலோ, கடன் பிரச்னையாலோ அல்ல. எனது பதற்றம் மற்றும் மனச்சோர்வு காரணமாக நான் இதைச் செய்கிறேன். எனக்கு ஒரு நபர் மற்றும் ஒரு அமைப்பைத் தவிர வேறு யாரிடமும் கோபம் இல்லை.

அந்த அமைப்பு ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம்), என் தந்தை என்னை அதில் சேரச் செய்தார். ஆர்எஸ்எஸ்ஸின் பல உறுப்பினர்களால் நான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன். ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

போலீஸில் புகார்

இந்த சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலிகுளம் கிளை மற்றும் வாலிபர் சங்க வழூர் ஒன்றியக்குழு சார்பில் பொன்குன்னம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், “சிறுவயதிலிருந்தே ஆனந்து அஜியை எலிகுளம், தம்பலக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கேரள மாநில இளைஞர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளது.

பிரியங்கா காந்தி கோரிக்கை

இந்த நிலையில், ஆனந்து அஜி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி கூறுகையில், “ஆனந்து அஜி தமது கடிதத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல நிர்வாகிகளால் தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் முகாமில் பலரும் இப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக ஆனந்து அஜியின் கடிதம் வெளிப்படுத்துகிறது. இது உண்மையானால் மிகவும் கொடூரமானது. இந்த குற்றம் தொடர்பாக நிலவும் மவுனத்தை உடைக்க வேண்டும்; இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *