கரூர் சென்றால் தவெக தலைவர் உயிருக்கு ஆபத்து என்று நயினார் நாகேந்திரன் சொல்லியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று அண்ணாமலை பதில் தந்துள்ளார்.
கரூர் துயரம்
கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சோகம் நிகழ்ந்து இரண்டு வாரங்களான நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூற காவல்துறையில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்து
இந்த நிலையில், கரூருக்கு விஜய் சென்றால் உயிருக்கு ஆபத்து என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், விஜய் கரூருக்கு போனால், அவர் உயிருக்கு யார் உத்தரவாதம்? 41 பேரை அடித்தும் மிதித்தும் கொன்றதுபோல் விஜய்யையும் செய்துவிடலாம். அதனால்தான் அவர் பாதுகாப்பு கேட்டு அனுமதி கோரியுள்ளார். விஜய் கரூருக்குச் சென்றால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்படும் அப்போது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்கள் ஊரில் பூதம் இல்லை
ஆனால், இதற்கு நேர் மாறாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நம் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திற்கும் செல்ல உரிமை இருக்கிறது. இதை தேவையில்லாமல் பெரிய விஷயமாக்குகிறார்கள். விஜய் கரூர் வரவேண்டும் என்றால், தொண்டர்களிடம் சொல்லி நேராக போகலாம். இதற்கு டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
நானும் கரூரைச் சேர்ந்தவன் தான். எங்கள் ஊருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி தேவையில்லை. கடந்த 10 நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வந்து சென்றிருக்கிறார்கள். எங்கள் ஊரில் பூதம் இல்லை. கரூர் மக்கள் அன்பானவர்கள். விஜய் வரட்டும், மக்கள் அவரை வரவேற்பார்கள். நான் மண்ணின் மைந்தன். நமது தமிழ்நாட்டில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை! யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று அதிரடியாக பேசியுள்ளார்.
பாஜகவினர் குழப்பம்
விஜய் கரூர் போனால் ஆபத்து என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு பக்கமும், கரூருக்கு விஜய் சென்றால் மக்கள் அவரை வரவேற்பார்கள் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கூறி வருவதால் யார் சொல்வதை நம்புவது என பாஜகவினர் குழப்பத்தில் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஈகோவால் அப்பாவி கட்சியினர் தவித்து வருகின்றனர் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


