சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அயோத்தியின் புரா கலந்தர் காவல் நிலையத்தின் கீழ் பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு திடீரென மர்மப்பொருள் வெடித்தது. இதில் அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தையடுத்து அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். வெடித்தது வெடிகுண்டு தானா என்பது குறித்து தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தரைமட்டமான வீட்டின் உரிமையாளர் பப்பு குப்தா என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இறந்தவர்கள் குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் நிகில் டிகரம் ஃபாண்டே கூறுகையில், எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் குண்டால் இந்த விபத்து நிகழ்ந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.


