சண்டையும், சச்சரவுமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 9 சீசன் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களிடையே மோதல் வெடித்து சண்டையும் வாக்குவாதமாக தொடர்கிறது. ஏற்கெனவே இந்த நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பலர் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர். தரமற்ற போட்டியாளர்களை விஜய் தொலைக்காட்சி களமிறக்கியுள்ளது என்ற குற்றச்சாட்டை பலர் முன் வைத்துள்ளனர். இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் கடுமையாக செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சூர்யாவின் கஜினி படத்தில் இடம்பெற்ற வாட்டர் மெலன் காட்சியை நடித்து பிரபலமடைந்த திவாகர், தன்னைத் தானே வாட்டர் மெலன் ஸ்டார் என்று கூறி வருகிறார்.
கர்ணன் படத்தில் நடித்த சிவாஜியை இமிடேட் செய்கிறேன் என்று இவர் நடித்த நடிப்பை பார்த்து பலர் திட்டித் தீர்த்தனர். பல குரலில் பேசுகிறேன் என்று அவர் குரலிலேயே பேசி அக்கப்போர் செய்து வருபவர்.அவரை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். யூடியூப் சேனல்களில் பேட்டியில் போட்டியாளர்களுடன் சண்டை போட்டு வெளியேறி சர்ச்சைக்கு பெயர் போனவர் திவாகர். இவர் பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கியதை பலரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் 7 பேர் உள்ளனர். இதில் வாட்டர் மெலன் ஸ்டார் டாக்டர் திவாகர், அகோரி கலையரசன் ஆகியோரை அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். ஆனால், தற்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் இயக்குநர் பிரவீன் காந்தி மிகக்குறைவான வாக்குகளைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதனால் அவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளது.
ஏனெனில், ஆதிரை, திவாகர், வியானா ஆகியோர் தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறப்போவது என்பது ஞாயிறன்று தெரிந்து விடும். அடிதடி, வாக்குவாதம், கைகலப்பு என ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் எலிமினேஷன் செய்யப்படுவது யார் என்ற போட்டி இணையவாசிகளிடம் நடந்து கொண்டிருக்கிறது.


