விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞரை காவல்துறை அடித்து கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
பட்டியலின இளைஞர்
மதுரை அண்ணாநகர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், முத்துலெட்சுமி தம்பதியரின் ஒரே மகன் தினேஷ்குமார் (30). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் ஐடிஐ படித்து முடித்து விட்டு வெள்ளரிபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தினேஷ்குமார் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக இன்று (அக்டோபர் 9) அதிகாலை 5 மணியளவில் தினேஷ்குமாரின் வீட்டிற்கு அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா தலைமையில் தனிப்படை காவலர்களான காமு, நாகராஜ் ஆகியோர் கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணை எனக் கூறி அழைத்து சென்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் காணவில்லை
அப்போது தினேஷ்குமார் தண்ணீர் கேட்டபோதும் தரமறுத்து காவல்துறையினர் அழைத்துசென்றதாகவும், 9 மணிக்கு அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு வந்து தினேஷ்குமாரை வீட்டிற்கு அழைத்துசெல்லுமாறு கூறியுள்ளனர். பின்னர் தினேஷ்குமாருடன் அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகிய 3 பேரையும் விசாரணைக்காக அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் கூறியபடி 9 மணிக்கு தினேஷ் குமாரின் தந்தை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபோது காவல் நிலையத்தில் தினேஷ்குமார் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது வழக்கறிஞருடன் தினேஷ்குமாரை காவல்துறையினர் எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்துள்ளனர்.
சடலமாக மீட்பு
இந்த நிலையில், தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள கால்வாயில் மூழ்கி சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தினேஷ் குமாரின் உடலை வாய்க்காலில் இருந்து தீயணைப்புத்துறையினர் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணியளவில் அண்ணாநகர் காவல்துறையினர் தினேஷ்குமாரின் தந்தையை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது தனது மகன் தினேஷ்குமார் குறித்து காவல்துறையினரிடம் அவரது தந்தை கேட்டுள்ளார்.
தப்பியோடியதாக தகவல்
அப்போது தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை மதுரை வண்டியூர் அம்மா திடல் அருகே உள்ள புற காவல் நிலையத்தில் வைத்து அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அப்போது விசாரணை முடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக காவல்துறை வாகனத்தில் ஏற்றிய போது தினேஷ்குமார் காவல் துறையினரிடம் இருந்து தப்பியோட முயன்றதாகவும், அப்போது வைகை ஆற்றிற்கு தண்ணீர் செல்லும் வண்டியூர் வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கி இறந்ததாகவும், பின்னர் அவரது சடலத்தை தீயணைப்புத் துறையினர் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடித்துக் கொலை?
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ்குமாரின் பெற்றோர் அண்ணாநகர் காவல் துறையினர் தங்களது மகனை விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்றுவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தினேஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தினேஷ்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் நிலையம் முற்றுகை
அப்போது 1 மணிக்கு மீட்கப்பட்டதாக சொல்லப்பட்ட சடலமானது மாலை 5 மணி வரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிணவறைக்கு கொண்டு செல்லப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தினேஷ்குமாரின் உடலை நேரில் பார்க்க வேண்டும் என காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவரது உறவினர்கள் தினேஷ்குமாரின் சடலத்தை பார்க்க பிணவறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது 5 மணியளவிலயே பிணவறைக்கு தினேஷ்குமாரின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுவந்துள்ளனர்.
சாலை மறியல்
இதையடுத்து தினேஷ்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கூறி தினேஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மதுரை கேகே நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இதனால் மாட்டுத்தாவணி கே.கே நகர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தினேஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் அண்ணா நகர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது. மதுரையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் புகார்
தினேஷ்குமார் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறியபோதும் சடலத்தை 5 மணி வரை பிணவறைக்கும் கொண்டு செல்லாதது ஏன் என்ற சந்தேகத்தையும் தினேஷ்குமாரின் உறவினர்கள் எழுப்பி வருகின்றன.ர் இதுகுறித்து தினேஷ் குமாரின் பெற்றோர் கூறுகையில், “எங்களது மகனை காலையில் காவல்துறையினர் விசாரணை என அழைத்துச் சென்ற பின்னர் 1 மணியளவில் தனது மகன் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறுகிறார்கள்.
கொலை வழக்கு பதிய வேண்டும்
எங்களது மகனுக்கு நீச்சல் தெரியும். ஆனால், காவல் துறையினர் பொய்யான காரணத்தை கூறி தினேஷ்குமார் உயிரிழந்து விட்டதாக கூறுகிறார்கள் . எங்களது மகனை காவல் துறையினர் விசாரணையின் போது அடித்து கொலை செய்து விட்டதாக சந்தேகம் வருகிறது எனவே. விசாரணைக்காக அழைத்துச் சென்ற அண்ணா நகர் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யும் வரை உடலை பெற மாட்டோம்” என்றனர்.


