தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விஜய் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


