எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு அஞ்சும் நிலைக்கு இலங்கை கடற்படையின் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறி வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விற்குறியாக மாறி நிற்கிறது. மறுபுறம் இலங்கை கடற்கொள்ளையர் தமிழக மீனவர்களை தாக்கி படகு எஞ்சின், மீன், வலை ஆகியவற்றை கொள்ளையடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மீனவர்களும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், கைது நடவடிக்கையை இலங்கை அரசு கைவிடாமல் மேற்கொண்டு வருகிறது. இன்றும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இன்று கைது செய்த இலங்கை கடற்படை நேற்று 30 பேரை கைது செய்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இரண்டு நாட்களில் 47 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவ கிராமங்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


