ஒடிசாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தில் காரஸ்ரோட்டா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சவுதாமினி மஹாலா(57) என்ற பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை ஒரு முதலை தாக்கி இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆற்றில் குதித்து சவுதாமினியை காப்பாற்ற முயன்றனர். ஆனால், தண்ணீருக்குள் அவரை முதலை இழுத்துச் சென்றதால் காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஆற்றில் அதிக முதலைகள் இருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இதேபோன்ற இந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி, கேந்திரபாராவில் உள்ள பிதர்கனிகா தேசிய பூங்காவிற்குள் உள்ள கோபரி ஆற்றில் மூன்று குழந்தைகளின் தாயான லட்சுமி டேலி மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் முதலையால் தாக்கப்பட்டார். அடுத்த நாள் லட்சுமி டேலியின் சிதைந்த உடல் மீட்கப்பட்டது. அதே போல ஜூன் 16-ம் தேதி, தன்லாடியா கிராமத்திற்கு அருகிலுள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் குளித்தபோது காஜல் மொஹந்தி என்ற பெண் முதலையால் கொல்லப்பட்டார். முதலை அவரை ஆழமான நீரில் இழுத்துச் சென்றது, பின்னர் அவரது உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. தற்போது சவுதாமினி மஹாலாவை முதலை ஆற்றில் இழுத்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


