இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து நிலச்சரிவில் சிக்கி புதையுண்டதால் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திடீர் நிலச்சரிவு
ஹரியாணாவின் ரோஹ்தக் பகுதியில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குமர்வின் பகுதிக்கு 30 பயணிகளுடன் தனியார் பேருந்து நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து பிலாஸ்பூரின் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்தின் மீது பாறைகள் மற்றும் மண் சரிந்தன. இதையடுத்து நிலச்சரிவின் இடிபாடுகளில் பேருந்து சிக்கியது.
18 பேர் பலி
இந்த நிலச்சரிவுக்குள் பேருந்து சிக்கிப் புதைந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிக்காக அங்கு விரைந்தனர். இதில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் கால மீட்பு படையினர் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த சம்பம் குறித்து பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதையறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் நிவாரணத்தொகையாக வழங்கப்படும்” என்று மோடி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


