உத்தரப்பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்சோர்வுடன் இருந்துள்ளார். இதனால் அவரது தந்தை விசாரித்துள்ளார்.
அப்போது, தான் படிக்கும் பள்ளியின் மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா தன்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கதவைப் பூட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் தேர்வில் பெயிலாக்கி விடுவேன் என்றும், உன் குடும்பத்தை அழித்து விடுவேன் என்று மிரட்டினார் என்று கூறினார். இப்படி மிரட்டியே பல மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறியதைக் கேட்டு அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தனியார் பள்ளியின் மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


