காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி அருகே, “காவேரி கூக்குரல்” மூலமாக விவசாயிகளுடன், 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் சிறுத்தை ஜெயக்குமார் தலைமையில், ஈஷா நர்சரி மானூர் ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் முன்னிலையில், தமயந்தி, இயற்கை ஆர்வலர் சரவணன், சாலைப்புதூர் இயற்கை பாதுகாவலன் விவசாய அணி மாடசாமி ஒருங்கிணைப்பிலும், தென்காசி மாவட்டம் தேவர்குளம் அப்துல்கலாம் நகரில் மரம் நடுவிழா சிறப்பாக நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில், “ஈஷா காவேரி கூக்குரல்” மூலமாக 393 விவசாய நிலங்களில், 653 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 513 டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஒரு கிராமம் ஒரு அரச மரம் :-
தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, விவசாயிகள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் மூலம் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் கிராமங்களில் அரச மரம் வளர்ப்பை ஊக்குவிக்க, பேரூர் ஆதீனத்துடன் இணைந்து நடத்தும், “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம் மூலமாக இதுவரை 23 கிராமங்களில் 150 அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.
விவசாயம் காப்போம் :-
“ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம்” தொடர்ந்து விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயம் செய்ய ஊக்குவித்து வருகிறது. ஈஷாவின் தொடர் முயற்சிகளின் மூலமாக 12 கோடிக்கு அதிகமான மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டு விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. இந்தாண்டு (2025 – 26) 1.20 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இதுவரை 51,89,472 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
ரூ.5, ரூ.10க்கு மரக்கன்றுகள் :-
தமிழகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் டிம்பர் மரக்கன்றுகள் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஈஷா நாற்றுப் பண்ணைகளில் டிம்பர் மரங்கள் மட்டுமல்லாது, புளி, பாதாம், இயல்வாகை, பூவரசு, இலைபொரசு, மந்தாரை, சரக்கொன்றை, மகிழம் போன்ற நிழல் மரங்கள் மற்றும் மாதுளை, கொய்யா, நெல்லி போன்ற நாட்டுரகப் பழ மரங்கள் 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.


