வேலைநிறுத்தப் போராட்டத்தால் உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
சமீப காலமாக பிரான்ஸ் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அந்த நாட்டின் அரசு பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் பல சமூக திட்டங்களுக்கான நிதி குறைக்க அரசு முடிவு செய்தது. இதன்படி பட்ஜெட்டில் அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டன. அதில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டது. இது நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் பிரான்ஸ் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்தையும் தடுப்போம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. பிரான்ஸ் அரசு பொது சேவைகளுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும். இதற்குப் பதிலாக பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று வேலைநிறுத்தம் நடைபெற்றது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின பிரான்ஸ் முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட நரகங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடடனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர். இதனால் பொது போக்குவரத்து சேவை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன.
இதன் காரணமாக உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அறியாமல் சென்றிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


