கஞ்சா கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரயில் நிலையத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம் டானபூரில் உள்ள பார் ரயில் நிலையத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றது. பிளாட்பாரம் 1-ல் பழைய ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎஃப்) அலுவலகம் அருகே நேற்று நள்ளிரவு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த கும்பலில் இருந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போனு பால்(27) என்பவரை ராஜு என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதைத் தடுக்க முயன்ற கணேஷ் பால் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி போனு பால் பரிதாபமாக உயிரிழந்தார். கணேஷ் பால் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்த உடனேயே காயமடைந்தவர்கள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்த போதிலும், அதிகாரிகள் மெதுவாக செயல்பட்டதால் போனு பாலை கொலை செய்த ராஜு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ரயில்வே போலீஸாரின் அலட்சியத்தால் தான் இந்த கொலை நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, கஞ்சா குடிப்பதில் ஏற்பட்ட மோதலில் போனு பால் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கொலை செய்த ராஜு இரண்டு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ரயில் நிலையத்தில் நடந்த கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


