பிஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி இன்று அதிகாலை மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள பூர்னியா மாவட்டத்தில் ஜபன்பூர் அருகே இன்று அதிகாலை வந்தே பாரத் ரயில் மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். ஜோக்பானி- தனாபூர் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயில் கதிஹார்-ஜோக்பானி ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த போது இந்த சோக விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்பு (ஆர்பிஎஃப்) பணியாளர்கள் மற்றும் உள்ளூர் போலீஸார், உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த இருவர் பூர்னியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் துசெஹ்ரா கண்காட்சியைப் பார்த்து விட்டு வந்த போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இந்த விபத்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்குள் பிஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி நடந்த இரண்டாவது விபத்து இதுவாகும். செப்.30-ம் தேதி சஹர்சாவில் ஹட்டியாகாச்சி ரயில் கிராசிங் அருகே வந்தே பாரத் ரயில் மோதி முதியவர் இறந்து போனார். தற்போது வந்தே பாரத் ரயில் மோதி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி செப்.15-ம் தேதி தான், ஜோக்பானிக்கு இடையே வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்து.


