கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு உள்பட 7 மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்பட நிர்வாகிகள் ஏற்கெனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், முக்கிய குற்றவாளி எனக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்த் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகி விட்டார். கடந்த 27-ம் தேதி முதல் அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லாததால், 5 தனிப்படை குழுக்கள் அவரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வர உள்ளன. அதனுடன் இணைந்து, தவெக கட்சியை தடை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ள மனுவும் உள்பட மொத்தம் 7 மனுக்கள் ஒரே நாளில் விசாரணைக்கு வர உள்ளன. இன்று மதுரை கிளை நீதிமன்ற விசாரணையின் முடிவே இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என்று சட்ட வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.
இந்த நிலையில்,41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குத் தொடுத்த காவல்துறை சம்பவ இடத்தில் இருந்த அக்கட்சியின் தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை எழுப்பியுள்ளது.


