விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகளை கரைக்கச் சென்ற போது ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டத்தில் உள்ள பந்தனா தாலுகாவில் உள்ள ஜாம்லி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்குப் பிறகு துர்கா சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க ஒரு டிராக்டரில் எடுத்துச் சென்றனர். அந்த டிராக்டரில் 30-க்கும் ஏற்பட்டோர் இருந்தனர். அந்த டிராக்டர் ஏரியை அடைந்த போது திடீரென துர்கா சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது. இதில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் மூழ்கினர்.
இதைப் பார்த்த அந்த கிராமத்து பொதுமக்கள் ஏரியில் குதித்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் உள்ளூர் போலீஸார் விரைந்து வந்து நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து கந்த்வா மாவட்ட ஆட்சியர் ரிஷவ் குப்தா கூறுகையில், ” ஏரி அருகே இருந்த உள்ளூர்வாசி, டிராக்டர் ஓட்டுநரிடம் முன்னே செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். ஆனால், அந்த ஓட்டுநர் அதைக் கேட்கவில்லை. இதனால் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் கவிழ்ந்துள்ளது. நீரில் மூழ்கி பலியானவர்களில் 14 வயது முதல் 16 வயதுடைய 8 சிறுமிகள் அடங்குவர். அதிஷ்டவசமாக ஜாம்லி கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் உடனடியாக தண்ணீரில் குதித்து பலரைக் காப்பாற்றினர். துரதிர்ஷ்டவசமாக, டிராலியின் கீழ் சிக்கியவர்களைக் காப்பாற்ற முடியவில்லை,” என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


