கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் பேசும் போது, அவர் மீது மர்மநபர் செருப்பு வீசியதற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் துயர சம்பவமாக அமைந்தது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜியை நேரடியாக பேசிய விஜய்
கரூரில் தவெக தலைவர் விஜய் பேசும் போது செந்தில் பாலாஜி என்று பெயரை குறிப்பிட்டு பேசி, அவரை கடுமையாக திட்டி, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
செருப்பு வீச்சு
அதே கூட்டத்தில், விஜய் பிரச்சார வாகனத்தில் பேசிக் கொண்டிருந்தபோது மர்மநபர் ஒருவர் விஜய் மீது செருப்பை தூக்கி வீசினார். ஆனால் அந்த செருப்பு விஜய் மீது படவே இல்லை. அந்த செருப்பை வீசிய மர்மநபர் செந்தில் பாலாஜி ஆதரவாளர் என்றும் திமுக நிர்வாகி என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது செந்தில் பாலாஜி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அது வேறு, இது வேறு
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “விஜய் பேசிய 6வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டது. என்னை பற்றி விஜய் 16வது நிமிடத்தில் தான் பேசினார். சிலர், என் பெயரை விஜய் சொன்ன பிறகுதான் செருப்பு வீசப்பட்டதாக தவறான தகவலை சோசியல் மீடியாக்களில் பரப்புகிறார்கள் என்றார்.
இருப்பினும், கூட்டத்தில் விஜய்யை நோக்கி செருப்பு எரிந்த நபர், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


