கொலை மிரட்டல் விடப்பட்ட மூத்த பத்திரிகையாளர் காணாமல் போன நிலையில் அவரது உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மூத்த பத்திரிகையாளரின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேசிய பத்திரிகையாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ன.
காணாமல் போன பத்திரிகையாளர்
உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் பிரதாப்(36). இவர் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (ஐஐஎம்சி) முன்னாள் மாணவராவார். இவரது மனைவி முஸ்கன்(30). மூத்த பத்திரிகையாளரான ராஜீவ் பிரதாப் ‘டெல்லி உத்தராகண்ட் லைவ்’ என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ராஜீவ் பிரதாப் கடந்த 19-ம் தேதி திடீரென காணாமல் போனார்.
உடல் கண்டெடுப்பு
இது தொடர்பாக ராஜீவ் பிரதாப்பின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. அடுத்த நாள் அவரது கார் ஜோஷியாரா தடுப்பணையில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அந்த காருக்குள் ராஜீவ் பிரதாப் இல்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். இந்த நிலையில், கங்கோரி அருகே உள்ள பாகீரதி ஆற்றில் பத்திரிகையாளர் ராஜீவ் பிரதாப் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கொலை மிரட்டல்
இதுகுறித்து ராஜீவ் பிரதாப்பின் மனைவி முஸ்கின் செய்தியாளர்களிடம் கூறுகையில், `என் கணவர் காணாமல் போன அன்று இரவு 11 மணியளவில் அவருடன் பேசினேன். அதற்குப் பிறகு இரவு 11.50 மணிக்கு, அவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை அனுப்பினேன். அது டெலிவரி ஆகவே இல்லை. அதன் பிறகுதான் அவர் காணாமல் போயிருக்கிறார்.
சமீபத்தில் உத்தரகாசி மாவட்ட மருத்துவமனை மற்றும் பள்ளி குறித்து தனது புலனாய்வு செய்திகளை தனது யூடியூப் சேனலான ‘டெல்லி உத்தராகண்ட் லைவ்’ வில் பதிவேற்றியிருந்தார். அதற்குப் பிறகு மிகவும் கவலையாக இருப்பதாக என்னிடம் கூறினார். வீடியோக்களை நீக்காவிட்டால் பலர் தன்னைக் கொன்று விடுவதாக மிரட்டுவதாகக் கூறினார். எனவே, அவர் தவறுதலாக அணையில் விழவில்லை. அது விபத்தல்ல” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் காவல்துறை, “பிரேத பரிசோதனைக்குப் பிறகே இது கொலையா, விபத்தா என்பது தெரியவரும். அதற்காக பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றது.
பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்
மூத்த பத்திரிகையாளர் ராஜீவ் பிரதாப்பின் மரணம் குறித்து சந்தேகத்திற்குரியவை என்று தேசிய பத்திரிகையாளர் சங்கங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன. இது தொடர்பாக
தேசிய பத்திரிகையாளர் கூட்டணி, டெல்லி பத்திரிகையாளர் சங்கம் மற்றும் கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (டெல்லி பிரிவு) ஆகியவை விடுத்துள்ள அறிக்கையில், உத்தரகாசியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், யூடியூபருமான ராஜீவ் பிரதாப் செப்டம்பர் 18, 2025 அன்று இரவு காணாமல் போனது குறித்து அவசர விசாரணை நடத்த வேண்டும்.
உத்தரகாசியிலுள்ள ஒரு மாவட்ட மருத்துவமனை மற்றும் ஒரு பள்ளியின் நிலை குறித்த வீடியோக்களை பதிவேற்றிய பின்னரே பிரதாப்பிற்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இவற்றை அகற்றுமாறு அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பிரதாப் இரவில் உள்ளூர் சாலையில் ஆல்டோ காரில் தனியாக ஓட்டிச் சென்றபோது காணாமல் போனார்.
குடும்பத்தினருக்கு இழப்பீடு
பாகீரதி ஆற்றில் இருந்து கார் மீட்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேதம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கார் ஒரு பள்ளத்தாக்கில் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று போலீஸார் கூறுகின்றனர். இருப்பினும், பத்திரிகையாளர் காணாமல் போன சூழ்நிலைகள் மிகவும் சந்தேகத்திற்குரியவை.
அவரின் மர்மமான மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய பத்திரிகையாளர் கூட்டணி, டெல்லி பத்திரிகையாளர் சங்கம், கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக உள்ளூர் பிரச்னைகள் குறித்து செய்தி வெளியிடுபவர்கள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் தீவிரமாக ஆராய்ந்து, அவற்றுக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு, கைது செய்து தண்டிக்க வேண்டும் என்பதையும் மாநில அரசுக்கு நினைவூட்டுகிறோம் என்று சங்கங்களின் நிர்வாகிகள் சுஜாதா மதோக், ஏ.எம்.ஜிகேஷ், எஸ்.கே.பாண்டே, என்.கொண்டையா, பிரசூன் எஸ்.காந்தத், டி.தனசுமோத் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
முதலமைச்சர் உத்தரவு
“பத்திரிகையாளர் ராஜீவ் பிரதாப் காணாமல் போனதில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். அவரது மரணம் குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு முதலமைச்சர் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் போலீஸார் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று என்று ஐஐஎம்சி முன்னாள் மாணவர் சங்கம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.


