மதுரையில் உள்ள தமிழகத்தின் நீளமான நத்தம் பறக்கும் பாலம் இரவு நேரத்தில் பலான பாலமாக மாறி வருகிறது. இதில் பெண்கள், திருநங்கைகளை டூவீலரில் அழைத்து வரும் இளைஞர்கள் அடிக்கும் கொட்டத்தை காவல் துறை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தின் நீளமான பாலம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளம் பகுதியில் இருந்து நத்தம் வரை 35 கிலோ மீட்டருக்கு 1,028 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2018 செப்டம்பர் மாதம் தொடங்கி பணி நிறைவு செய்யப்பட்டது. இதற்காக மதுரை பாண்டியன் ஓட்டலில் இருந்து ஊமச்சிகுளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை 7.3 கிமீ தூரத்திற்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்பாலப்பணி 5 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த பாலம் 2023 ஏப்ரல் மாதம் தான் திறக்கப்பட்டது.
விபத்துகள் அதிகரிப்பு
தமிழகத்தின் நீளமான இந்த பறக்கும் பாலத்திற்காக 192 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலத்தில் வாகனங்கள் அதிகம் செல்வதை விட பாலத்திற்கு கீழே உள்ள சாலையைத்தான் வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனாலும், பறக்கும் பாலத்தில் அவ்வப்போது விபத்து நடைபெற்று தான் வருகிறது.
இந்த பாலம் திறக்கப்பட்ட ஜனவரி 2023-ம் ஆண்டு முதல் 2025 ஜனவரி மாதம் வரை பறக்கும் பாலத்தின் மேல்பகுதி மற்றும் கீழ் பகுதியில் 86 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இந்த விபத்துகளில் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 67 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பறக்கும் பாலத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் தான் இந்த விபத்துகள் நடக்கின்றன. இதன் காரணமாக பெருவாரியான வாகனங்கள் பாலத்தில் செல்வதில்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட இளசுகள் இரவில் அடிக்கும் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பலான தொழில்
யாரும் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க மாஸ்க் அணிந்து கொண்ட இளம்பெண்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மாலை 6 மணிக்கு மேல் பறக்கும் பாலத்தில் செய்யும் வேலை அச்சில் ஏற்ற முடியாது. டூவீலர்களில் அவர்களை அழைத்து வரும் இளைஞர்களுடன் அவர்கள் செய்யும் சல்லாப வேலைகளால் தான் பறக்கும் பாலத்தில் நிறைய விபத்துகள் நடக்கின்றன.
பாலத்தின் ஓரத்தில் இளம்பெண்களை வாகனத்தின் மறைவாக நிறுத்தி விட்டு இளைஞர்கள் எந்த கூச்சமும் இன்றி பாலியல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதைப் பார்த்து விட்டு வாகனங்களில் செல்பவர்கள் கருமம், கருமம் என தலையில் அடித்துக் கொண்டு செல்கின்றனர். இதில் இளம்பெண்கள் மட்டுமின்றி திருநங்கைகளும் பணத்திற்காக இரவில் இளைஞர்களால் அழைத்து வரப்படுகிறார்கள். பல நேரங்களில் பாலத்தின் கடைசிப்பகுதிகளில் மின் விளக்குகள் எரியாததால், இதை இவர்கள் சாதகமாக பயன்படுத்துகின்றனர். அத்துடன் டூவீலர்களில் இளம்பெண்களை வண்டியை ஓட்டச்சொல்லி இளைஞர்கள் செய்யும் சில்மிஷ வேலைகள் பட்டப்பகலிலேயே நடக்கிறது.
பிறந்த நாள் பார்ட்டி
இதே போல வழிப்பறி கும்பலும் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் அய்யர் பங்களா ஏறும் பகுதியில் அமர்ந்து கொண்டு அவ்வழியே செல்பவர்களை துரத்திச் சென்று பர்ஸ், செல்போன்களைப் பறித்துச் செல்கின்றனர். அத்துடன் மது பாட்டில்களைக் குடித்து விட்டு பாலத்தில் உடைத்துப் போட்டு விட்டுச் செல்கின்றனர். காலையில் இந்த பாலத்தை சுத்தம் செய்யும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் தலையில் அடித்துக் கொண்டு இவற்றை அள்ளிப்போடுவது தினமும் நடக்கிறது.
அத்துடன் பாலத்தில் பிறந்த நாள் பார்ட்டிகளும் நடைபெறுகிறது. கேக் வெட்டி மது புட்டிகளை உடைத்து நடைபெறும் இப்படியான சம்பவங்கள் பாலத்தில் செல்வோரை அச்சுறுத்துகின்றன. குடித்து விட்டு பீர் டப்பாக்களை பாலத்தின் கீழே செல்பவர்கள் மீது எறிகின்றனர். இதன் காரணமாக இரவு நேரத்தில் பாலத்தின் கீழே வாகனங்களில் செல்பவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் 360 டிகிரியில் கேமராக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கேமராக்கள் மூலம் எத்தனை பேர் அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தை இதுவரை வெளியிட்டதாக தெரியவில்லை.
ரீல்ஸ் பைத்தியங்கள்
அதிவேகமாக வாகனங்கள் செல்லக்கூடிய இந்த பறக்கும் பாலத்தில் டூவீலர்களில் சாகசம் செய்து ரீல்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்களில் பாலத்தில் செல்பவர்கள் அச்சமடைகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. பாலத்தின் மேல் பகுதியில் ஏறி நின்று கொண்டு சிலர் கேமராக்களில் செஃல்பி எடுக்கவும் செய்கிறார்கள். இப்படி எடுக்கும் போது தப்பித் தவறி கீழே விழுந்தால் அதோ கதிதான்.
ஆனால், ரீல்ஸ் மோகம் ஆபத்துகளின் வாசல் திறந்து கிடப்பதை உணர மறுக்கிறது. திருப்பாலை பகுதியில் பறக்கும் பாலத்தில் கேமராக்கள், கல்லூரி பெண்களுடன் பட்டப்பகலில் இவர்கள் ரீல்ஸ் எடுப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. பாலத்தில் ரீல்ஸ் மோகத்தில் அடுத்தவர்களுக்கு அச்சுறுத்தல் செய்யும் ரீல்ஸ் பைத்தியங்களை காவல்துறை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தமிழகத்தின் பெருமை மிகு நத்தம் பறக்கும் பாலம் இரவு நேரத்தில் பலான பாலமாக மாறி வருகிறது. ரீல்ஸ் எடுப்பவர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றைத் தடுக்க வேண்டிய காவல் துறையில் போதுமான காவலர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, மதுரை புறநகர், மதுரை மாநகர் காவல்துறை இணைந்து நல்ல நோக்கத்துடன் கட்டப்பட்ட இந்த பாலத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழக காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடைக்கண் பார்வை நத்தம் பறக்கும் பாலம் பக்கம் திரும்புமா?


