பாகிஸ்தானை பந்தாடிய திலக் வர்மா- சாம்பியன் பட்டம் வென்றும் கோப்பையை வாங்காத இந்திய அணி!

திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காக் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற விளையாடின. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி துபாயில் போட்டி தொடங்கியது. இதில் லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன் முடிவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 29) இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தையும் பதிவு செய்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஃபர்ஹான் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 57 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சைம் அயூப்பும் 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

குல்தீப் சுழல்
தொடக்க வீரராக களமிறங்கிய ஃபகர் ஸமான் அரைசதம் எடுப்பார் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத் தொடர்ந்து மேற்கொண்டு களமிறங்கிய முகமது ஹாரிஸ், கேப்டன் சல்மான் ஆகா, ஹுசைன் தாலத், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஏமாற்றம் தந்த இந்திய வீரர்கள்
இதனையடுத்து 147 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ரன்கள் எடுப்பதற்குள் அபிஷேக் சர்மா (5), சுப்மன் கில் (12) கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்து களமிறங்கிய திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அணியை மீட்கும் முயற்சியில் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இந்த ஜோடி 57 ரன்கள் குவித்த நிலையில் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் சிறப்பாக விளையாட, இந்திய அணியு இலக்கை நெருங்கியது. மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த திலக் வர்மா அரைசதம் கடக்க, இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது இவர்கள் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தில் திலக் வர்மா
கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஹரிஷ் ராஃப் வீசிய அந்த ஓவரில் துபேவின் சூப்பர் சிக்ஸருடன் 13 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பஹீம் அஷ்ரஃப் வீசினார். அதில் பவுண்டரி விரட்டிய துபே, அதே ஓவரின் கடைசி பந்தில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட, பதற்றமான நிலையில் திலக்குடன் இணைந்தார் ரிங்கு சிங். முதல் பந்தில் திலக் 2 ரன்களை விரட்ட, இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். அடுத்து ஒரு ரன்னை தட்டி விட, நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெறச் செய்தார் ரிங்கு சிங்.
இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது.

9-வது முறையாக சாம்பியன்
இத்தொடரில் மூன்று முறை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், மூன்று முறையும் இந்திய அணியே வென்று சாதனை படைத்துள்ளது. 41 ஆண்டு கால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி, பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பை வென்றுள்ளது. மேலும் இத்தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளில் வென்ற ஒரே அணி என்ற பெருமையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 9வது முறையாக ஆசியக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

கோப்பையை வாங்காத இந்தியா
ஆசியக் கோப்பை வென்ற பிறகும், இந்திய அணிக்கு கோப்பையும் மெடலும் வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைமைப் பொறுப்பில் உள்ள மொஷின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், செபாஷ் ஷெரீப் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருக்கிறார். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மொஷின் நக்விதான் வெற்றிக் கோப்பையை வழங்குவதாக இருந்தது.

ஆனால், இந்திய அணி நிர்வாகம், ஆசிய,க கோப்பை மற்றும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் மெடல்களை மொஷின் நக்வியிடம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தாமதமாக தொடங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா மட்டும் நக்வியிடம் இரண்டாமிடம் (பிடித்த அணிக்கான செக்கை பெற்றுக்கொண்டார். ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும், தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடம் பெற்றுக்கொண்டனர்.

மொஷின் நக்வி
வெற்றி பெற்ற இந்திய அணியின் அணுகுமுறையை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கண்டித்தார். அவர் கூறுகையில், “இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல; அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம்.” என்றார்.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், “நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்.” என்று கூறினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மொஷின் நக்வி நடந்துகொண்ட விதம் குறித்து நவம்பரில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் முறையிட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  • Related Posts

    ‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

    ‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

    ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!

    மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *