கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் இன்று சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மட்டுமின்றி திருச்சி மருத்துவமனையிலும் மயக்க நிலையில் இருந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற அரசியல் கட்சியின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும் அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபியிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும், காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசனை செய்தார். இன்று இரவே தனிவிமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் விரைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே கரூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் விரைந்தார். அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கண்கலங்கி அழுதார்.
கரூரில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 8 குழந்தைகள் 16 பெண்கள், 12 ஆண்கள் உள்பட 36 பேருக்கு தலா 10 லட்ச ரூபாயும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சமும் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


