கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் இன்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். இதில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் தவெக நிர்வாகிகள் அவர்களை தூக்கிச் சென்றனர். அவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் வந்தன. ஆனாலும், கூட்ட நெரிசல் இருந்ததால் உள்ளே நுழைய சிக்கல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள், பெண்கள், 6 குழந்தைகள் என 33 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் மயக்க நிலையில் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பலரின் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனதால் கரூர் அரசு மருத்துவமனை முன்பு பெண்கள் கதறி அழுதனர். மருத்துவமனையில் ஏராளமானோருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மயக்க நிலையில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வெளி மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கருர் விரைய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார். மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்றார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி. டேவிட் ஆசீர்வாதம் சம்பவ பகுதிக்கு செல்லவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 28) கரூருக்கு செல்ல உள்ளார்.


