ஆஸ்திரேலியா நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையில் இசையமைப்பாளர் தேவா அமர வைத்து, கையில் செங்கோல் கொடுத்து அழகு பார்த்துள்ளது அந்த நாட்டு அரசு. அதற்கு இசையமைப்பாளர் தேவா நன்றி தெரிவித்துள்ளார்.
1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. கடந்த 36 ஆண்டுகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், அஜித், விஜய் என பலருடனும் தேவா பணியாற்றியிருக்கிறார். மெல்லிசையில் மயக்க வைக்கும் தேனிசைத் தென்றல் தேவாவின் பாடல்கள் இன்றளவும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கின்றன.
தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட தேவா, தமிழ் சினிமாவின் கானா மகாராஜாவாக பார்க்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்திய தேவா, ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார். சமீபத்தில் தேவா ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அப்போது அவரை ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்று கவுரவித்துள்ளது.
அவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் மரியாதையுடன் வரவேற்றனர். மேலும், நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையில் தேவாவை அமர வைத்து, தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரிய சின்னமான செங்கோல் கொடுத்துக் கவுரவித்தனர். இதனால் தேவா நெகிழ்ந்து போனார்.
இதுதொடர்பாக தேவா கூறுகையில்,” ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது. எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம். இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்தார்.


