இந்திய விமானப்படைக்கு, 62,370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 97 தேஜஸ் ரக போர் விமானங்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு 97 தேஜஸ் ரக போர்விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், உள்நாட்டில் போர் விமானங்களை தயாரித்து வரும் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்’ நிறுவனத்திடம் இருந்து, 97 தேஜஸ் ரக போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இதற்காக அந்நிறுவனத்துடன், 62,370 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து இருந்தது.
இந்த ஒப்பந்தப்படி 2027 – 28- ம் நிதியாண்டு முதல் நம் ராணுவத்துக்கு போர் விமானங்கள் வழங்கும் பணியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தொடங்கும். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள், 97 போர் விமானங்களை நம் விமானப்படைக்கு அந்நிறுவனம் தயாரித்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை போர் விமானங்களில், 64 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்கும். இதனால், 105 உள்நாட்டு நிறுவனங்களுக்கு நேரடி பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


