பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதுடன், தைலாபுரம் தோட்டத்திற்கு மெட்டல் டிடெக்டர் கருவியுடன் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாமகவைச் சேர்ந்த எம்எல்ஏ அருள், தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடம் அளித்துள்ள மனுவில், எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீப காலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய மருத்துவர் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் பாமகவினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித்தலைவர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் மருத்துவர் மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர். மருத்துவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமக-வின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் மருத்துவர் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
எனவே அவருடைய பாதுகாப்பு கருதி முழுநேரமும் மருத்துவர் அய்யா வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு மருத்துவர் அய்யாவை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலில் பரிசோதனை கருவி ( மெட்டல் டிடெக்டர்) அமைத்திட கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.


