உடல்நலக்குறைவால் மரணமடைந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன்( 55). இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், தமிழக எரிசக்தி துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்தவர். கடந்த சில நாட்களாக இவர் உடல்நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பீலா வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பீலா வெங்கடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பீலா வெங்கடேசனின் மரணத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


