மதுரை செக்கனூரணி அருகே ஐடிஐ மாணவரை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக பல லட்ச ரூபாய் கைமாறிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில் அரசு சார்பில் இயங்கும் சமூகநீதி விடுதி உள்ளது. இந்த விடுதியில் பள்ளி மாணவர்கள், அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் என ஏராளமானோர் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் படிக்க முடியாமல் பாதியில் இடைநின்ற நான்கு மாணவர்களை, செக்கானூரணி ஐடிஐயில் செப்டம்பர் 11-ம் தேதி ஐடிஐ முதல்வர் சேர்த்துவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், செக்கானூரணி அரசு மாணவர் விடுதியில் உள்ள ஒரே அறையில் தங்கிப் படிக்க அவர் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, அம்மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளனர்.
இந்நிலையில், 15 வயது மாணவரை, உடன் படிக்கும் 17 வயது மாணவர்கள் ஆடையைக் கழட்டி நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை மாணவரை நிர்வாணப்படுத்தும் போதே எடுத்துள்ளனர். அந்த வீடியோவை பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தையிடமும் காட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நிர்வாணப்படுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய இந்த வழக்கை ராகிங் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளது தான் தற்போது பெரும் பிரச்னையாகியுள்ளது.
ஒருவரின் ஆடையைக் கழட்டி துன்புறுத்துவது போக்சோ வழக்கில் பதிவு செய்ய வேண்டிய இந்த பிரச்னையை செக்கானூரணி காவல் ஆய்வாளர் திலகராணி மடைமாற்றம் செய்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாணவரை நிர்வாணப்படுத்திய மூன்று மாணவர்களை கைது செய்து மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு (சிறுவர்களுக்கான சீர்திருத்தப்பள்ளி) கொண்டு சென்று உடனடியாக பிணையில் விடுதலை செய்ததாக புகார் கிளம்பியுள்ளது. இதற்காக பட்டாசு வியாபாரி மூலம் பல லட்ச ரூபாய் கைமாறியதாக புகார் கூறப்படுகிறது.
தமிழகத்தை உலுக்கிய இப்பிரச்னை குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த பிரச்னை வேகமெடுக்க ஆரம்பித்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை விசாரிக்க கூர்நோக்கு இல்லத்திற்கு நேற்று சென்றுள்ளார்.
அப்போது அந்த மூன்று மாணவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அப்போது அவர்களை பிணையில் விடுவித்த நீதிபதி அப்போது அங்கு இல்லாததால் டென்ஷனான ஆட்சியர் பிரவீன் குமார் தமிழக அரசு கவனம் செலுத்தும் முக்கிய இந்த பிரச்னையில் இப்படி செய்து விட்டீர்களே என்று அங்கிருந்தவர்களிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
கூர்நோக்கு இல்ல நீதிபதியும், செக்கனூரணி காவல் ஆய்வாளர் திலகராணியும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வேண்டிய மூன்று சிறார்களை சாதாரண வழக்கில் கைது செய்து உடனே விடுதலை செய்து விட்டார்கள் என்று அரசல் புரசலாக பேசப்படுகிறது. எனவே, தமிழக அரசு இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு செக்கனூரணி காவல் நிலையத்தில் மூன்று சிறார்களை விடுவிக்க எவ்வளவு கைமாறியது என்று விசாரிப்பதுடன், இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். தமிழக அரசு செய்யுமா?


