
விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும். அவர்கள் விமர்சிப்பதைப் பார்த்து ரசித்துவிட்டு செல்ல வேண்டியது தான். பாஜக எனது கொள்கை எதிரி என்றும், திமுக எனது அரசியல் எதிரி என்றும் நீங்கள் (விஜய்) சொல்கிறீர்கள். பாஜகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் என்ன கொள்கை வித்தியாசம் உள்ளது? கொள்கை வேறு, அரசியல் வேறு கிடையாது. கொள்கையே அரசியல். பாஜக உங்கள் கொள்கை எதிரி என்றால், காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா?
விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒரு அண்ணனாக தம்பிக்கு அறிவுரைகளை சொல்கிறேன். இப்போது சரி செய்து கொள்ளவில்லை என்றால், வேறு அரசியல் கட்சிகள் எடுத்துச் சொல்வார்கள். மனசாட்சி இல்லாமல் மத்திய அரசு வரி விதிக்கிறது. மக்களுக்கு சுமை என்று தெரிந்தும் ஜிஎஸ்டி வரி விதித்தது ஏன்? ஜிஎஸ்டியை கொண்டு வந்ததற்காக அரசு மக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்