
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செப்டம்பர் 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவில் பங்கேற்க பக்தர்கள் கூட்டம் திருப்பதியில் திரண்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா புரட்டாசி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, பகவானை தேரில் வைத்து நான்கு மாட வீதிகளில் உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். இது புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்திற்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த விழாவைக் காண ஆந்திரா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திருப்பதியில் திரள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆந்திரா மாநில அரசு சார்பில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளார். பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்திற்கான கயிறு மற்றும் தர்ப்பை ஊர்வலமாக கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.43 மணி முதல் 6.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
இந்த விழாவைக் காண வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 16 வகையான சிறப்பு உணவுகள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாட வீதிகளின் வாகன சேவையை காணக் காத்திருக்கும் 35 ஆயிரம் பக்தர்கள் 45 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்பட்டு அனைவரும் வாகன சேவையை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மாட வீதிகளுக்கு வெளியே உள்ள பக்தர்கள் வாகனச் சேவையை பார்க்கும் வகையில் 36 இடங்களில் பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்பப்படுகிறது.
இன்று முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை அனைத்து விஐபி தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 60 டன் பூக்களைக் கொண்டு சுவாமிக்கு மலர் அபிஷேகம் நடத்தப்படும். 29 மாநிலங்களைச் சேர்ந்த 229 கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். 3,500 தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து மலைக்குச் செல்ல நான்கு நிமிடங்களுக்கு ஒரு அரசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த 4,700 போலீஸாரும், 2 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்களும், கூட்டத்தைக் கண்காணிக்க 3 ஆயிரம் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தினமும் 8 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.