
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்த தவெக தலைவர் விஜய்யின் கருத்தை வரவேற்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை,. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ரகசியமாக சந்தித்து பேசினார். சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டில் ஒன்றரை மணி நேரமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு வாகனங்களை தவித்து விட்டு மாற்று காரில் அண்ணாமலை ரகசியமாக டி.டி.வி.தினகரனை சந்தித்தது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்த போது நான் சென்னைக்குக் வெளியே இருந்தேன். தற்போது அவரை சந்தித்து பேசியுள்ளேன். திமுக கூட்டணியை வீழ்த்த என்ன செய்ய வேண்டும், அதில் டி.டி.வி.தினகரனின் பார்வை குறித்து பேசினோம். அரசியல் களம் சூடுபிடிக்கும் போது சில மனஸ்தாபங்கள் மாறும் என நினைக்கிறேன். இன்னும் காலம் இருக்கிறது, காத்திருப்போம். அரசியலில் கூட்டணி என்பது மாறும். .முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்திக்க வேண்டும். அவரின் சுற்றுப்பயணம் முடிந்து வந்ததும் சந்திப்பேன். முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்த தவெக தலைவர் விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் பாஜகவின் பி டீம் என்கிறார்கள். விஜய்க்கு நாக்கு இருக்கிறது. வாய் இருக்கிறது, அவர் பேசுவார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, திமுகவிற்காக அதிகம் பேசுகிறார். பாஜக போபியாவில் இருந்து வெளியே வர வேண்டும். சட்டமன்றத்தில் நான்கு பாஜக எம்எல்ஏக்கள் பேச எழுந்தாலே அமரச்சொல்லி விடுவார். சூப்பர் ஸ்டார் ரஜினியை மாதம் ஒருமுறை சந்திப்பேன். அவர் என் ஆன்மீக குரு.” என்றார்.