
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்திக்கு மர்மநபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. இவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவரது தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு தொலைபேசியில் மர்மநபர் மிரட்டிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி காலை 9.40 மணிக்கு சுதா மூர்த்திக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தான் ஒரு மத்திய தொலைத்தொடர்பு ஊழியர் என்றும், சுதா மூர்த்தியின் செல்போன் எண், ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். அத்துடன் அந்த எண்ணில் இருந்து சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டும் தொலைத்தொடர்புத்துறை சுதா மூர்த்தியன் செல்போன் எண்ணுக்கு வரும் அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப்போவதாக தொலைபேசியில் அந்த மர்மநபர் மிரட்டியுள்ளார் அந்த நபரின் செல்போன் எண்ணை, ட்ரூகாலரில் சரிபார்த்தபோது, அதில் தொலைத்தொடர்புத் துறை என்று தோன்றியுள்ளது. ஆனாலும் அந்த மர்மநபரின் பேச்சால் சுதா மூர்த்தி சந்தேகம் அடைந்தார். இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸில் செப்டம்பர் 20-ம் தேதி சுதா மூர்த்தி புகார் அளித்தார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.