
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலாகியுள்ளது. எனவே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஹெச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, இனி 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஏற்கெனவே 28 சதவீத வரி விதிப்பின் கீழ் இருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விகிதத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளன. இதனால், உணவுப் பொருட்கள், வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட 375 பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
நெய், பன்னீர், வெண்ணெய், ஜாம், உலர் பழங்கள், காபி மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட பொருட்கள் விலை குறைந்துள்ளது. இதுபோல, டி.வி., ஏ.சி., வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. பெரும்பாலான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைந்துள்ளதால் அவற்றின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளது. சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளதால் வீடு கட்டுவோர் பயனடைவார்கள்.
வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், புதிதாக வாகனம் வாங்குவோர் அதிக அளவில் பயனடைவார்கள். உடற்பயிற்சி மையங்கள், முடி திருத்தும் நிலையங்கள், யோகா பயிற்சி மையங்கள் உள்ளிட்ட சேவைத் துறைக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சோப்பு, ஷாம்பு, டூத்பிரஷ், டூத்பேஸ்ட், ஷேவிங் கிரீம், டால்கம் பவுடர் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி 12 மற்றும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 375 பொருட்கள் விலை குறைந்தது. இதனால் பொதுமக்களின் நுகர்பொருள் செலவு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி நிறுவனங்களுக்கு மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஹெச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி குறித்த நுகர்வோர்களின் புகார்களை 1800-11-4000 என்ற எண்ணில் அளிக்கலாம். அதேபோல, https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.