பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் கடையா?- டாக்டர் அன்புமணி கண்டனம்

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் விதிகளை மீறி டாஸ்மாக் கடை அமைப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் விதிகளை மீறி மதுக்கடையை அமைத்து நடத்தி வருகிறது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை அழிக்கும் வகையிலும் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடையை அமைப்பதற்காக செய்யப்பட்டுள்ள விதிமீறல்கள் ஒன்றல்ல. இரண்டல்ல. பழவேற்காடு ஏரியை ஒட்டியப் பகுதி பறவைகள் சரணாலயமாக கடந்த 1980-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள நிலம் முழுவதும் கடற்கரையோர புறம்போக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் யாருக்கும் பட்டா வழங்க முடியாது. ஆனால், அவ்வாறு அறிவிக்கப்பட்டு 41 ஆண்டுகள் கழித்து 2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடலோர புறப்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை உட்பிரிவு செய்து மகிமை ராஜ் என்பவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பட்டா வழங்கப்பட்ட இடத்தில் தான் கட்டிடம் கட்டப்பட்டு சில வாரங்களுக்கு முன் புதிய மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.

விதிமீறல் இத்துடன் முடிவடைந்து விடவில்லை. மதுக்கடை அமைக்கப்பட்டிருக்கும் கட்டிடம் வெள்ளநீர் வடிகாலின் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்து மழை பெய்யும் போது வெள்ளநீர் வடிகாலில் தண்ணீர் ஓடாமல் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் மதுக்கடைக்கு குடிகாரர்கள் வசதியாக சென்று வருவதற்காக முதன்மைச் சாலையில் இருந்து மதுக்கடை வரை விதிகளை மீறி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனாலும் மழை நீர் எளிதாக வடியாத சூழல் ஏற்படும்.

பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடைகளை அனுமதிப்பது சட்டவிரோதம் ஆகும். அது தெரிந்தும் இந்தப் பகுதியில் மதுக்கடை நடத்த எவ்வாறு அனுமதி அளித்தீர்கள்? என்று டாஸ்மாக் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, புறம்போக்கு நிலமா? என்பது எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால், பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகள் இருக்கின்றனவா? என்பது தான் எங்களின் கவலை. அவ்வாறு எந்த சிக்கலும் இல்லாததால் மதுக்கடை அமைக்க அனுமதி அளித்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். திமுக ஆட்சியில் அதிகாரிகளின் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது.

சர்ச்சைக்குரிய மதுக்கடை இதற்கு முன் பழவேற்காடு நகரப் பகுதிக்குள் செயல்பட்டு வந்திருக்கிறது. அங்கு குடிகாரர்கள் தொல்லை அதிகரித்ததைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் இந்த இடத்திற்கு மதுக்கடை மாற்றப்பட்டுள்ளது. ஓர் இடத்தில் மதுக்கடை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டால் அந்தக் கடையை மூடி முத்திரையிட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக புதிய இடத்தில் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதே பெரும் குற்றமாகும். அதுவும் விதிகளை மீறி மதுக்கடையை கட்டி வாடகைக்கு விட்டிருப்பதை ஏற்க முடியாது.

பறவைகள் சரணாலயம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை…மழை நீர் வடிவதற்கான கால்வாய் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை… மதுக்கடைகளை அமைப்பது தான் என்று திமுக அரசு செயல்படுவதிலிருந்தே மக்கள் நலனில் அதற்கு அக்கறை இல்லாததை உணர்ந்து கொள்ள முடியும். இவ்வாறு மது வணிகத்தை மட்டும் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவார்கள். இது உறுதி” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *