
ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான சேவைகளுக்காக கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களின் அடையாள ஆவணங்களில் ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், மானியம் பெறவும், சலுகைகளைப் பெறவும் ஆதார் அட்டை அவசியமான அடையாளமாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையில் புகைப்படம், பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கியிருக்கும். மேலும் ஆதார் கார்டில் செல்போன் எண்ணைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் தற்போது ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணம் உயரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான புதிய கட்டண மாற்றம் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து யுஐடிஏஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் தற்போது உள்ள 50 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக உயருகிறது. அதேபோல் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பிற புதுப்பிப்பு சேவைகளின் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 125 ரூபாயாக ஆக உயர்த்தப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார். இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களைப் பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.