
பிரிட்டனில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டனில் இரண்டுநாள் அரசுமுறைபயணம் மேற்கொண்டார்.. அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மருடன் சந்திப்பு, அரச குடும்பத்தினருடன் கலந்துரையாடல், ஒப்பந்தம் கையெழுத்து என பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டிருந்தது. இந்த சந்திப்புகள் முடிந்து செக்கர்ஸ் மாளிகையில் இருந்து ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு தனது மனைவி மெலானியா டிரம்ப் ‘மெரைன் ஒன்’ என்ற அதிநவீன ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தார். நடுவானில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, ஹெலிகாப்டரில் சிறிய அளவிலான கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமானிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, லூடன் விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு விமான தளத்தில் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வேறு ஒரு ஹெலிகாப்டரில் அவர்கள் பயணம் தொடர்ந்தது. இதனால் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமான நிலையம் செல்வதில் 20 நிமிடங்கள் தாமதமானது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெலிகாப்டரில் ஒரு சிறு ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், “பாதுகாப்பாகப் பறங்கள் என்று நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா? ஏனென்றால் நான் இந்த விமானத்தில் இருக்கிறேன். நான் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்!” என்று சிரித்துக் கொண்டே கூறினார். உலகின் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படும் அமெரிக்கா அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு என்பது பாதுகாப்புத்துறையின் கவனமின்மையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.