
பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர் ரோபோ சங்கர். நடிகர் விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், விஷாலுடன் இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரோபோ சங்கருக்கு சில நாட்களுக்கு முன் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதன்பின் உடல் நலம் குணமாகி நடிப்பில் பிஸியானார். இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பில் இருந்த ரோபோ சங்கருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள வீட்டில் ரோபோ சங்கர் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் முகநூலில்”, திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி சின்னத்திரையில் சாதித்து- திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர், ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.