
தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களைக் கட்சித் தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா என்று தவெக தலைவர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி(தவெக) முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் டிஜிபியிடம் பரப்புரை நடத்த அனுமதியளிக்குமாறு மனு அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி திருச்சியில் பரப்புரையில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதியளித்தது.
இந்த நிலையில், தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தவெக தலைவர் விஜய், பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார்முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, , தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களைக் கட்சித் தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா என்று நடிகர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார். இதனிடையே விஜய் பிரசாரத்துக்கு நிறைவேற்ற இயலாத பிற கட்சிகளுக்கு இல்லாத வகையில் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனைத்துக் கட்சிகளும் பொருந்தும் வகையில் பொதுவான நிபந்தகைளை வகுக்க தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், பொதுச்சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட்டார். அதேபோல், திருச்சியில் சேதமடைந்த பொதுசொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும் என்று எச்சரித்த நீதிபதி, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.