
அதிமுக உட்கட்சி விவகாரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிடவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,, “153 சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தேன். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. திமுக அரசு அகற்றுவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது பல்வேறு நிலைபாடு. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது அவருக்கு கருப்பு கொடி காட்டினார். கருப்பு பலூன் பறக்க விட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது வெள்ளை குடை பிடித்தவர்கள். இதுதான் திமுகவின் நிலைப்பாடு. இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் நிலைப்பாடு.
எனது டெல்லி பயணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி உள்ளன. தமிழக ஊடகங்கள் இந்தியாவிற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். முகம் துடைப்பது எல்லாம் திரித்து செய்தி வெளியிடுவது ஊடக தர்மமா ? நான் வீட்டில் இருந்து வெளியே வரும் போது என் முகத்தை கைக்குட்டையால் துடைக்கிறேன். அதை எடுத்து அரசியல் செய்கிறீர்களே.. வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டு ஊடகங்களும் பத்திரிகைகளும் தரம் தாழ்ந்த இதை வெளியிடுவது எந்த அளவிற்கு சரியாக இருக்கும். ஊடகங்களும் பத்திரிகைகளும் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும்.
அதிமுகவை பற்றி விமர்சனம் செய்வதற்கு அமைச்சர் ரகுபதிக்கு எந்த அருகதையும் கிடையாது. அதிமுக உட்கட்சி பிரச்னைகளில் நுழைய மாட்டேன் என ஏற்கெனவே அமித்ஷா தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் என் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஜெயலலிதா அவரை அதிமுகவில் இருந்து நீக்கினார். ஜெயலலிதா மறைவு வரை டிடிவி தினகரன் சென்னை பக்கமே வரவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என கூறிய பிறகு தான் டிடிவி தினகரன் இதுபோல் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.