
பென்சில்வேனியாவில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள தென்கிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள யார்க் கவுண்டில் உள்ள கோடோரஸ் டவுன்ஷிப்பிற்கு காவல் பணிக்கு அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மர்மநபர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 5 காவல் துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. இதனால் மர்மநபர் மீது காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று காவல் துறை அதிகாரிகளும், அவர்களை சுட்ட மர்மநபரும் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த இரண்டு காவல் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் ஆணையர் கர்னல் கிறிஸ்டோபர் பாரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாரிஸ் தெரிவித்தார்.
மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்ட அதிகாரிகள் எந்த அமலாக்க நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என்பதை காவல் துறையினர் தெரிவிக்கவில்லை. போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெல்சில்வேனியாவில் மூன்று காவல் துறை அதிகாரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.