
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார அனுமதி தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் அவர் பிரசாரத்தை தொடங்கினார். விமான நிலையம் அருகே கூடிய தவெக தொண்டர்களால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.
இந்த நிலையில், செப்டம்பர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 20- ம் தேதி வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாக தவெக அறிவித்துள்ளது. இந்த பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கக் கோரி, தவெக சார்பில் கடந்த 9 மற்றும் 15- ம் தேதிகளில் தமிழக காவல்துறை தலைவரிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமுமின்றி பரிசீலித்து, உயர்நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி, மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டும் என நீதிபதி என். சதீஷ்குமாரிடம், தவெக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி முறையிட்டார். ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்க மறுத்த நீதிபதி நாளை விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.