
மனிதர்களை இரண்டாவது முறையாக கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு விநோத உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் தெருநாய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வகிறது. இந்த நிலையில், தெருநாய் பிரச்னையை கையாள உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை கடந்த மாதம் பிறப்பித்திருந்தது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், தெருநாய் தொல்லைக் குறையவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு இறந்த குழந்தையின் உடலை தெருநாய் தூக்கிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், மனிதர்களை இரண்டாவது முறையாக கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக ஆயுள்முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், எவ்வித தூண்டுதலும் இல்லாமல் தெருநாய்கள் மனிதர்கள் இரண்டாவது முறை கடித்தால், அந்த நாய்கள் ஆயுள் முழுவதும் விலங்குகள் காப்பத்தில் அடைக்கப்படும். தெருநாய்கள் முதல் முறையாக கடித்தால் அந்த நாய்களை 10 நாட்கள் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டு கருத்தடை செய்து பின்னர் விடுவிக்கப்படும். தொடர்ந்து நாய்களுக்கு மைக்ரோ சிப்பும் பொருத்தப்படும். மீண்டும் அந்தநாய்கள் மனிதர்களை இரண்டாவது முறையாக கடித்தால், ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பிறகு யாராவது தெருநாய்களைத் தத்தெடுக்க வேண்டும் என்றால், இனி நாய்களை தெருவில் விடமாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.