
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கடிதம் வழங்கியதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு நேற்று சென்றிருந்தார். அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தனியார் ஓட்டலில் ஓய்வு எடுத்த எடப்பாடி பழனிசாமி, இரவு 8 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அவருடன் அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை, தனபால், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சென்றிருந்தனர். இந்த சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது. இதன்பின் அமித்ஷாவை தனியாக எடப்பாடி பழனிசாமி சந்திப்பு பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான #பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.