
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பெய்த கனமழையால் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் மாயமானார்கள்.
இந்தியாவில் தென்மேற்கு பருவழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வடமாநிலங்களில் திடீர், திடீரென மேகவெடிப்பால் அதிக கனமழை பெய்கிறது. இதனால் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பால் இந்தியாவின் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கனமழை கொட்டியதால் அங்கிருந்த சாலைகள், வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன் சிறிய கட்டிடங்கள் மண்ணோடு புதைந்தன. .இதனால் 15 பேர்உயிரிழந்தனர். மேலும் 16 பேர் மாயமானார்கள். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் 900 பேர் சிககித் தவித்தனர்.
இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்தில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான குறைந்த முதல் மிதமான அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், இன்றும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உத்தராகண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1, 200 கோடி நிவாரணத் தொகையை அளித்துள்ளது. வெள்ள சேதத்தினை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் மேலும் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.