
போதைப்பொருள் ஏற்றி வந்ததாக வெனிசுலா படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட நாளாக பகைமை மோதல் நீடித்து வருகிறது. வெனிசுலாவில் மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் சப்ளை செய்வதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க குற்றம் சாட்டி வருகிறார். அத்துடன் மதுரோவை கைது செய்பவர்களுக்கு பரிசுத்தொகையாக 415 கோடி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெனிசுலா கடற்கரையில் ஒரு படகு மீது அமெரிக்க படைகள் டிரோன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா ராணுவம் நடத்திய தாக்குதலில் வெனிசுலா படகு தீப்பிடித்து எரியும் 28 விநாடிகள் கொண்ட வீடியோவை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப் பொருள் பயங்கரவாதிகள் அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்தியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அத்துடன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த தாக்குதல் அவசியம் என்றும் கூறியுள்ளார்.
இதே போல செப்டம்பர் 3-ம் தேதி வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தற்போது இரண்டாவது தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.