
ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் சரிபார்ப்பு பணிகள் கட்டாயமாகிறது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலாகிறது.
ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமே பதிவு செய்கின்றனர். அதில் பெரும்பான்மையானோர் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) என்ற இணையதளத்தை தான் பயன்படுத்துகின்றனர். இந்திய ரயில்வே அங்கீகரித்துள்ள இந்த அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவுசெய்யலாம்.
இந்த நிலையில் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, முதல் 15 நிமிடங்களுக்குள் ஆதார் விவரம் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யலாம். இந்த புதிய விதியானது அக்டோபர்1-ம் முதல் அமலுக்கு வருகிறது.
ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், சரிபார்க்கப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, இந்த விதி, தட்கல் முறையிலான முன்பதிவுக்கு மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.